Saturday, March 24, 2012

ஆளில்லா அசைவற்ற அடிகுழாய்

டங்கு டங்குன்னு
ஊரே சேர்ந்து
ஓங்கி ஓங்கி ஓய்வின்றி அடித்த அடியில்
உடைந்து கிழிந்தது
அடிகுழாயின் முதுகெலும்பு

முதுகு வளைந்த
பசி பூத்த வயிறோடு
மூச்சுவிடும் மூதாட்டியாய்
வெய்யிலில் ஒற்றைக்காலில் நிற்கும்

வைகறை,
நண்பகல், மாலையிலும்
ஊர் கூடி சந்திக்கும்
உறவுகளின் பல்கலைகழகம்

சிலசமயம் மேலும் கீழுமான
வயசு பெண்களின்
டமார் டமார் அடிகளில்
வாய்மட்டுமின்றி
மூக்கு முதுகு புறங்களிலும்
பிதுங்கி கொட்டும் தண்ணீர்

பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு
வலிதாங்கமாட்டாமல்
மெதுவாய் அடிக்கச்சொல்லி
கண்ணீர்விடும்

சற்று தூரத்தில்
காலிகுடங்களோடு நடந்துவரும்
கிழவிகளை கண்டு
இடப்பக்க கள்ளி வேலிக்குள்
பதுங்கும் கரட்டானாய்
ஓடி ஒளியும் சிறுவர்கள்

தண்ணிக்கு வரும் சாக்கில்
குடங்களை அடிகுழாயில் காத்திருக்கவைத்து
காடு கரை கேணி மேடுகளில்
காத்திருக்கும் காதலருடன்
காதல் பகிரும்
தாவணிப்பெண்கள்

குளிக்காமலே பள்ளிகூடம்போகும்
அழுக்கு பசங்களுக்கு மத்தியில்
அடிகுழாயிக்கும் கிழக்கே
லைப் பாய் சோப்பு கரைய கரைய
குளிக்கும் லாரன்சு மாமா

நான்தான் முன்னாடிவந்தேன்
நான்தான் முன்னாடிவந்தேன்னு
கைகலப்பில்லா சண்டைகளில்
சின்னபயல எவ்வளவு நேரம்டி
நிக்கவைப்பீகன்னு சண்டையிடும்
பழனியம்மா அண்ணி

ஒருவர் வயலுக்கு மட்டுமே
பாய்ச்சப்பட்டது
காமாட்சிபுரத்தில் கட்டப்பட்ட
கூட்டுகுடிநீர்

கொஞ்சமாதங்களில்
வற்றிவிட்டன
குழிதோண்டிய
உறைகிணறுகள்
பிறகு
மேட்டுப்பட்டியிலிருந்து அடித்து
இடுப்பிலும் தலையிலுமாய்
சுமைகளோடு பயணப்பட்ட தாயிடம்
தன்னையும் தூக்கச்சொல்லி
ஒட்டாரம்பிடிக்கும்
குழந்தைகள்

எம்மண்ணில்
எம்பதுகளில்தான்
பிரசவமானது
அடிகுழாய்

திடீர் திடீரென்று
தொண்டை அடைத்துக்கொண்டு
தண்ணீர் தரமறுக்கையில்
பெயர்சூட்டப்படுவதுண்டு
"கெட்டுப்போன அடிகுழாயென்று"


கெட்டுப்போன அடிகுழாயால்
மீண்டும்
மேட்டுப்பட்டியிலுள்ள
அடிகுழாய்களை நோக்கி
ஓடத்துவங்கும்
காலிகுடங்கள்

மழையின்றி
குளம் வற்றிய
பொங்கல் பண்டிகைகளில்
அடிகுழாயில் கட்டிவைத்து
வைக்கோலில் தேய்த்து
குளிப்பாட்டி பொட்டுவைப்பதுண்டு
கருநிற ஆடுகளுக்கும்
பன்னிற மாடுகளுக்கும்

தெருக்கொன்றாய்
திருகு குழாய் முளைக்க
நாகரீக குண்டு விழுந்து
யாழ்ப்பான நூலகமாய்
சாம்பலாகியது
மானிட உறவுகள்

அன்று கூட்டம் நிறைந்த
குடங்களுக்கு நடுவில்
பானைவைத்த இடத்தில்
இன்று ஆளில்லா அசைவற்ற
அடிகுழாயின் முகத்தடியில்
முளைக்கிறது பனை

சாணி தெளித்த
வாசலுக்குமுன்
அயல்நாட்டு தொழிற்சாலை கழிவுகளாய்
கால்வாயில் சாக்கடை

இன்னும் இன்னும்
வசதிகள்
வாய்வைத்து தின்னும்
நம் ஆயுளை

வெகு நேரமாய்
வெறித்து வெறித்து பார்த்தபடியே
ஆறுதல் பட்டுக்கொண்டேன்
மந்தையில்
கட்டப்பட்டிருக்கும்
தலை பெருத்து கால் சிறுத்த
தண்ணீர் தொட்டியும்
ஒரு பிரமாண்டமான
அடிகுழாயென்று

No comments:

Post a Comment