நினைவுகளின் நிலநடுக்கத்தில்
நிர்மலமாய் புதைகின்றனர்
அப்பாயில்லாத அப்பாவும்
அம்மாயில்லாத அம்மாவும்
கிணற்றில்போட்ட அஞ்சு பைசா
தூளி ஆடிகிட்டே மிதந்து மிதந்து
தரைதொட விரைவதைபோல
நடுநெஞ்சில் மிதக்கிறது
இளமை இறகுகள்
குழந்தைகளோடு
ஒரேபாயில் தூங்கிய இரவில்
விளக்கில் நசுக்கிய
மூட்டபூச்சி தடயங்களை
மூடிமறைத்துவிட்டது
வார்னீஷ்ச கலந்த சுண்ணாம்பு
கொளுத்தப்பட்ட பனையோலை
புதைமேடுகள்தானோ?
சிமென்ட் சாலையினுள்ளே
மூதாதையாரின்
காலடிச்சுவடுகள்
மண்ணோடு கலந்த வைக்கோலில்
உடைந்து கிடக்கும்
அடைகாத்து குஞ்சுபொறித்த
முட்டைஓடுகள்
பகலும் இரவும் மாறி மாறி
எட்டிப்பார்த்த குடிசை ஓட்டைகளை
தின்று கொளுத்து சிவந்து கருத்தது
சீமை ஓடுகள்
வீட்டோடு திண்ணைக்கும்
சானி மொழுகி
அய்யர்காட்டு மூலையில்
வெட்டி வந்த செம்மண் பூசி
வெள்ளையடித்த மிச்சத்தில் பிழிந்த
சுண்ணாம்புகோடுகள்
பின்னாளில்
இரண்டு திண்ணையில் ஒன்று
வரந்தாவாய் உருமாற
சுவரில் முளைத்தது
மற்றொரு வாச கதவு
அன்று
அதிகாலை அடுப்பங்கரையில்
சாம்பல் அள்ளி
சின்னமகளும் பெரியமகளும்
தென்னங்கன்னுக்கு அருகில்
துலக்கிய பாத்திரங்கள்
இன்று
வரண்டு கிடக்கின்றன
தென்னை மரத்து அடியில்
நினைத்தநேரத்தில்
அடிகுழாயில் தண்ணீர் அடித்து
துவைத்துப்போட்ட பள்ளிச்சீருடைகள்
இப்போதெல்லாம்
மாலையில் திறந்துவிடும்
திருகு குழாயின் வருகைக்காக
காத்துக்கிடக்கின்றன
காலிகுடங்கள்
தூக்கம் துறந்த கருக்கல்லில்
மூச்சு வாங்க வாங்க
நாக்கு ஏங்க ஏங்க
உறிஞ்சி உறிஞ்சி தேநீர் குடித்த
V.S.கோட்டை தேவர்கடை
சாணார்பட்டிக்கு இடம்பெயர்ந்தது
அதிகாரிபட்டி சந்தையில்
வாங்கிவந்த அரிசிஒட்டிய
உருண்டை, வடைகளை
ஆளுக்கொண்ணு கொடுத்து
தன்பங்கு பாதிவடையையும்
செல்ல பிள்ளைக்குத்தந்த
அந்த சனிகிழமை சாயங்காலம்
பால்கொஞ்சம் குடிக்கவிட்டு
மகன் பிடித்த கன்று குட்டி
விளக்கெண்ணை பிசுபிசுக்க
பசுமாட்டு காம்பில் தடவி
சர்ரு புர்ருன்னு அங்கும் இங்குமாய்
பால் கறந்த ஊர் மந்தை
மரணபடுக்கையில் கிடக்க
பால் இறங்குகிறது
மந்தையின் தொண்டையில்
நடவுக்கும் களைஎடுப்புக்கும்
ஆள்கூப்பிட வரும்
பொட்டையம்மா ,கோவிந்தா ,
லட்சுமியோட அத்தனைபேரும்
குளத்து வேலையில உக்காந்துட்டாக
காமாட்சிபுரம்
வாத்தியாருக்கு பதினைந்து வருடம்
வெள்ளைச்சாமி
தேவருக்கு பத்து வருடம்
பண்ணைக்கு இருந்த களைப்புல
மேட்டுப்பட்டி பெருமாள்
வாத்தியாருக்கு தோட்டம்போடுகிறார்
அவசர ஆத்திரத்திற்கு பணம் தருவதால்
ஒவ்வொரு கிராமத்திலும்
கணவனை இழந்த மனைவியோ
மனைவியை இழந்த கணவனோ
பிள்ளைகள் மறந்த
கணவன் மனைவியோ
ஓரிரவு பெய்த பேய்மழையில்
வேரோடு சாய்ந்துகிடந்த
ஊரோர அரசமரத்தைபோல
முடிவற்ற
நினைவு தரையில் விழுந்தபடியே
பேர பிள்ளைகளின்
கோடை விடுமுறைக்காகவே
மூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்
நினைவுகளின் நிலநடுக்கங்களில்
சிக்கிகொண்ட முதுமை எறும்புகள்
No comments:
Post a Comment