சுடுகாட்டில்
சோறு சமைக்க
அடுப்பெரித்துக்கொண்டு இருந்தார்கள்
எம் மூதாதையர்கள்
பக்கத்துக்காட்டிலுள்ள
புளியமரத்தில்
ஊனாங்கொடிகளை கட்டி
தூளியாடிக்கொண்டு இருந்தார்கள்
சின்ன வயதில் நோய்வாய்ப்பட்டு
செத்துப்போன
சத்யா அக்காவும்
பெருமாள் அண்ணனும்
யாருடைய தொடுதலின்றியும்
நடுப்பாதையிலிருந்து
சாலையோரத்திற்க்கும்
சாலையோரத்திலிருந்து
நடுப்பாதைக்கும்
மாறி மாறி நடந்து வந்தார்
தவறி விழுந்து செத்துப்போன
பார்வையற்ற சுந்தராசு மாமா
வெகுநேரமாய்
டாஸ்மார்க் கடையில்
காசை நீட்டிக்கொண்டே இருந்தார்
கள்ள சாராயம் குடித்து
செத்துப்போன தாத்தா
தொட்டிலில் அழுகின்ற குழந்தைக்கு
பாலூட்ட தவியாய் தவிக்கிறாள்
பிரசவித்த நாளிலே
காக்காய் வலிப்புவந்து இறந்த
மகேஸ்வரி
இருக்கும்போது சோறுபோடாத
மகன்கள் வெளியூரில் இருக்க
குழிமேட்டில்
வெற்றிலை பாக்கு புகையிலையோடு
மதுபானத்தையும்
தன் பேரன் வைக்க
ஆசை ஆசையாய்
குடித்துக்கொண்டு இருக்கிறார்
வேலப்பன்
.
புளியமரத்தடியில்
பெட்டிக்கடைவைத்து
தேன்மிட்டாய் ,முறுக்கு ,அப்பளம்
விற்றுக்கொண்டு இருந்தார்
அம்மைவந்து அனாதியாய்
அகால மரணமடைந்த
முட்டிக்காலில் நடக்கும் அமுலம்மா
மண்டபத்தைச்சுற்றி
ஒட்டுப்பீடிகளை தேடிக்கொண்டு இருந்தார்
பேயடித்த சவரியார் மாமா
பச்சை குளத்தில்
நீச்சல் பழகிக்கொண்டு இருந்தார்கள்
கரையோரத்தில் குளிக்கும்போது தவறி
ஆழத்தில் மூழ்கிய
மேட்டுப்பட்டி சத்தியா
வத்தலம்பட்டி ரேணுகா உட்பட நாலுபெண்களும்
அவரவர் அவரவர்
வேலைகளை செய்துகொண்டு இருக்கையில்
ஆடையின்றி அண்ணா கயிறு இன்றியும்
போர்வை போர்த்திக்கொள்ளாமல்
வியர்வை சொட்டச்சொட்ட
யாருமில்லா குழிக்குள்
படுத்துக்கொண்டு இருந்தது
ஆறடி வெளிச்சம்
கிராமம் கிராமமாகவே இல்லை
சுடுகாடும் சுடுகாடுபோலவே இல்லை
ஆக்கிய சோறை ஆறவைத்து
அத்தனைபேரும்
ஊட்டிக்கொண்டு இருந்தார்கள்
கடைக்குட்டி செல்ல பிள்ளையான
எனக்கு
பாத்திரமே காலியானபோதும்
கடைசிவரை
என் வயிருமட்டும் நிரம்பவே இல்லை
இப்படி இப்படியாக
இறந்துபோன மனிதர்கள்
வசிக்கும் ஊரானது
சுடுகாடு
கொஞ்சம் கொஞ்சமாய்
யாருமற்றுப்போன
ஆவிகள் நடமாடும் சுடுகாடனது
கிராமம்
No comments:
Post a Comment