வானில் பறந்துகொண்டிருந்த
திட்டு திட்டான
சாம்பல் நிற மேகங்கள்
வெயிலில் வேலை செய்யும்
கருத்த விவசாயி உடல்போல்
வானம் கறுத்துப்போனது
வாசலில் காய்ந்த விறகுகள்
நனையக்கூடாது என்பதற்காக
கொஞ்சம் கொஞ்சமாய்
அள்ளி அள்ளி
திண்ணையில் போட்டாள் அம்மா
தான் நனைந்தபடியே
பின்பு
அடிகுழாயிக்கும் அருகிலிருந்த
ஆட்டுக்குட்டிகளை பிடித்துவந்து
மீதித்திண்ணையில்
கட்டிக்கொண்டு இருக்கையில்
ஆடுகளோடு முற்றும் நனைந்திருந்தாள்
உரல்கல்லில் கட்டிவைத்த
மாட்டையும்
முளைக்குச்சியில் கட்டிவைத்த
கன்றுக்குட்டிகளையும்
ஒழுகுகின்ற கொட்டத்தில்
ஒழுகாத இடம்பார்த்து
கட்டிவைத்தார் அப்பா
பாடப்புத்தகங்களை
பையில் நுழைத்து
ஒழுகாத இடத்தில
நனையாமல் வைக்க
முயற்சி செய்து கொண்டுயிருந்தோம்
மூன்றாம் வகுப்பு படித்த நானும்
நான்காம் வகுப்பு படித்த அக்காவும்
குடிசைகுடைக்குள்
வெவ்வேறு இடங்களில்
ஒழுகிய தண்ணீரை பிடித்துவைக்க
குடும்ப உறுபினர்கள்
அத்தனைபேரும் ஆயத்தமானோம்
சுவர்மீது வெள்ளிதாம்பூலத்தட்டும்
அடுப்பங்கரையில்
பித்தளை தாம்பூலத்தட்டும்
தையல் இயந்திரத்தின்மீது செம்பும்
அம்மிக்கல்லுக்கு அருகில்
குண்டுச்சட்டியும்
நடுவீட்டில் சாப்பாட்டுத்தட்டும்
அதன்பக்கத்தில் டம்ளரும்
இடம்பெயர்ந்துகிடக்கும்
திடீரென்று இடிமுழக்கத்துடன்
மழைப்பாம்பு தீவிரமடைந்து
பாத்திரங்களில் இருந்து
பொங்கிவழிந்து
தென்மேற்கு மூலைநோக்கி
ஓடத்துவங்கியது
நடுக்கத்தோடு நின்றுகொண்டுயிருந்த
அப்பாயி
அர்ஜுனா அர்ஜுனா சொல்லும்போது
பெரியக்காவும்
அர்ஜுனா அர்ஜுனா சொன்னது
நானும் சின்னக்காவும்
யார் அந்த அர்ஜுனா என்று
முனுமுனுத்துக்கொண்டோம்
வெகுநேரமாய் அம்மாவும் பெரியக்காவும்
மொண்டு மொண்டு
வாசலில் ஊற்றிக்கொண்டே இருந்தார்கள்
வீட்டில் தேங்கிய மழைநீரை
அன்றிரவு
விடிய விடிய உறங்கவிடாமல்
உடல் முழுவதும்
நட்டு நட்டுன்னு
கொத்திக்கொண்டே இருந்தது
மழைபாம்புகள்
No comments:
Post a Comment