வெள்ளை கண்மீது
விடியலை விரட்டியபடி
ஒரு பொட்டு
இருட்டு விழியில்
தொங்கிக்கொண்டு இருக்கிறது
சாகாத கண்ணீர் துளியோடு
கழுத்தறுந்த கனவுகள்
கனவுகளின்
மண்பானையின் முதுகில்
கருங்கல்லின் கைரேகைகள்
உச்சி மண்டையில் வெப்பம் விதைத்தது
ஒளிச்சேர்க்கை மூலம் உசுரூட்டும்
வெண்ணிற சூரியன்
ஆலமரம் நவாமரம்
இலுப்பை மரங்களை சுற்றி
கட்டிவைத்தபடி
மேய்ந்துகொண்டு இருந்தன
காலையில் ஓட்டிச்சென்ற
கன்னி ஆடும்
அழகர்கோவிலுக்கு நேந்துவிட்ட
கெடா ஆடும்
இடையிடையே
வாய்க்காலோரம் முளைத்த
அருகம்புல் ,கோரபுல்
காய்ஞ்சுபோன
ஆலமரத்து இலைகள்
பழுத்து கிடந்த
நவாமரத்து இலைகளோடு
காரான்முள்ளை
குதறி குதறி தின்றன
அசதிதீர
பகல் தன் படுக்கையை
விரித்துக்கொண்டு இருந்தது
அந்த சந்தியா காலத்தில்
புளியமரத்திலிருந்து
கிழக்கு நோக்கி
கிளைகளுக்கு நடுவில்
ஒழுகிக்கொண்டு இருந்தது
செந்நிற சூரிய ஒளி
படியில்லாத
பால்வாடி மொட்டைமாடியில்
பக்கத்து ஊருக்கு கேட்குமாறு
ஒலித்துக்கொண்டு இருந்தது
முல்லை ரேடியோ குழாய்
மாரியம்மன் கோயிலுக்குள்
வாழைபழம் , கல்கண்டு ,
கருப்பட்டி ,சுக்கு, மிளகோடு
கரைத்து வைக்கப்பட்டது
பானக்கரசம்
எதிர்கால ஏக்க ஏணிகளில்
ஏறியபடி
பெருமாள் கோவில் மண்டபத்தில்
டேவிட் மாமாவின் வருகைக்காக
காத்துகிடந்தாள்
பழனியம்மாள் அக்கா
வீடு வீடாய்
விசாரித்துக்கொண்டு இருந்தாள் அம்மா
இருட்டியும் வீடு திரும்பாத
அக்காவை
காளியம்மன் கோவிலுக்கருகில்
கயிறுகளால்
தரைகூட்டியபடி
மே...மே ன்னு கத்தி கத்தி
கதறி கதறி அழுதபடியே
அம்மாவை நோக்கி ஓடிவந்தன
காலையில் பழனியம்மா அக்கா
ஓட்டிச்சென்ற ஆடுகள்
நடுகிணற்று தண்ணீரை
கரும்பு காட்டிற்கு நீர்பாய்ச்சியபின்
வைக்கோலோடு
காஞ்சுபோன கடலைசெடியை உருகி
தீனி போட்டுக்கொண்டு இருந்தார் அப்பா
பண்ணையார் வீட்டு தொழுவத்திலிருந்த
மாடுகளுக்கு.
பழனியம்மா ஏய் பழனியம்மோவ்
குளக்கரை ,கேணிமேடு கோவில்சுவர்
மரம் செடி கொடி,
புழு பூச்சி மீது பட்டு
அம்மாவின் கூக்குரல் எதிரொலித்தது
பழனியம்மா ஏய் பழனியம்மோவ்
மதுரை மேலமாசிவீதியில் தங்கி
தையல் வேலை
செய்துவந்தார் பெரியண்ணன் ராமு
வடமதுரை விடுதியில் தங்கி
ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்
சின்ன அண்ணன் வடிவேல்
அக்காவை காணாம் என்பது
ஏதோ செடியை விலக்கி தேடும்
புதருக்குள் ஓடி விழுந்த
சிவப்பு நிற
காரக் பந்தைபோலவே இருந்தது
விளையாட்டு சிறுவனான எனக்கு
ஏம்மா பழநியம்மாவை பார்த்தீகளான்னு
ஊரெல்லாம் படிக்காத அம்மா கேட்கையில்
தெரியாதென்றே சொன்னார்கள்
தெரியாதவர்களும், தெரிந்தவர்களும்
கண்ணுக்கெட்டும் தூரம் மட்டும்
முக்கால் இருட்டு
முக்காடு போட்டிருந்தது
ஒரு கிறித்துவ ஆணும்
ஒரு இந்து பெண்ணும்
ஊரை விட்டுவிட்டு போவதை
சுடுகாட்டுக்கு போவதைபோன்று
கடைசி கண்வைத்தன
தொண்ணூறுகளில் தோற்றமளித்த
தகர (பிள்ளையார்)கோவிலும்
வேரூன்றியிருந்த
அரச மரமும்
மிதிவண்டியில் உட்காரவைத்து
ரங்கசாமி கொட்டம்,பாறைகுளம்,
ஸ்ரீநிவாசன் வாத்தியார் வீட்டு வழியோடு
ஆறாயி அக்கா காத்திருந்த
காமாட்சிபுரத்து பிரிவை அடைந்தார்கள்
இப்ப வருவாரோ எப்ப வருவாரோ யென்றபடி
அப்பாவின் வருகைக்காகவே
பயந்து பயந்தே
காத்துகிடந்தாள் அம்மா
கண்டாரோலி
உன்னாலதாண்டி எம்புள்ள ஓடி போய்ட்டா
செல்லம் கொடுத்து கொடுத்து
இப்படி கெடுத்து புட்டியேன்னு
காயம் காய்க்குமாறு
சாட்டையால் அடிவாங்கும்
வண்டிமாடாய் அப்பாவால்
தண்டிக்கப்பட்டார் அம்மா
அடி உதை தாங்கமாட்டாமல்
வேக வேகமாய் ஓடி
சூசை தாத்தா வீட்டுக்குள் ஒளிந்துகொண்டாள்
பின்பு
போர்வையை எடுத்து முக்காடு போட்டபடி
பெருமாள் கோயில் மண்டபத்தில் உறங்கபோனார்
ஆலமரங்களுக்கடியில்
அடுக்கிவைத்திருந்த பண்ணையார் தோட்டத்து
கரும்பு கட்டுகளின் காவலுக்கு
சுவரில் ஒட்டியபடியே
கதவிடுக்கில் எட்டிப்பார்க்கும்
பல்லியாய்
கண்கொட்டாமல்
அடிமன அச்சத்தோடு
காத்து வரும் காலடிக்கும்
அதிர்ந்தவாறே முழிச்சு கிடந்தாள் அம்மா
சேவலற்ற அதிகாலை இருட்டின்மீது
கால்வைத்தபடி
அய்யனார் பேருந்தில் ஏறி
தன் பிள்ளைகளோடு
ஊரைவிட்டு போய்க்கொண்டு இருந்தாள்
அம்மாவும்
வாழக்காய் பட்டியிலுள்ள
தன் அண்ணன்
ரங்கசாமி வீட்டிற்கு
No comments:
Post a Comment